மாவட்டத்தில் மீட்புபணி அலுவலர்களுக்கான ஒத்திகை தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் மீட்புபணி அலுவலர்களுக்கான ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாமக்கல் மாவட்ட மீட்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் மூலம் மழைக்காலங்களில் வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கி விட்டது. இது வருகிற 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
குறிப்பாக மருத்துவமனைகளில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகள் குறித்த விழிப்புணர்வு, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திருச்செங்கோடு தாலுகா சூரியம்பாளையம் ஏரி பகுதியில் ஒத்திகை நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிகள், ஜேடர்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேரிடர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஒத்திகை
எந்த வகை பேரிடர்களையும் எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் இந்த ஒத்திகை பயிற்சி மிகவும் முக்கியத்துவம் ஆகும். எனவே இந்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சியினை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, கவுசல்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கலையரசு உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.