தன்னார்வலர்களுக்கு தாசில்தார் அலுவலகத்தில் பயிற்சி
பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு தாசில்தார் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் உபகரணங்களை தாசில்தார் ஆய்வு செய்தார்.
கோத்தகிரி
பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு தாசில்தார் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் உபகரணங்களை தாசில்தார் ஆய்வு செய்தார்.
முன்னெச்சரிக்ைக நடவடிக்கை
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் பேரிடர்களை தடுக்கவும், பேரிடர்கள் நிகழ்ந்தால் அதை எதிர்கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மண் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மழைநீர் எளிதில் வழிந்தோடும் வகையில் கால்வாய்களில் அடைப்புகளை அகற்றும் பணியிலும் நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மண் சரிவு ஏற்பட்டால் உடனடியாக அவற்றை அகற்றுவதற்கு வசதியாக பொக்லைன் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் இன்னல்கள் ஏற்படும் காலத்தில் பொதுமக்களை மீட்பதற்கும், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கும், அபாயகரமான பகுதிகள் குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் அளிக்கவும்தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, கோத்தகிரி தீயணைப்பு நிலையதிற்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு பேரிடர் காலத்தில் பயன்படுத்துவதற்கு தேவையான மீட்பு உபகரணங்களின் இருப்பு போதுமானதாக உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டதுடன், மேலும் பேரிடர் மீட்பு சாதனங்கள் கூடுதலாக தேவைப்படுகிறதா? என்று அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் உதவுவது குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தாசில்தார் காயத்ரி, வருவாய் ஆய்வாளர்கள் தீபக், வேல்மயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.மேலும் அனைத்து கிராமங்களில் இருந்தும் தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.