மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய வகையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்வது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் முதல் மாவட்டமாக தேனி மாவட்டத்தில் இந்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறளாளிகள் தேசிய நிறுவனம் மூலம் விரிவுரையாளர் மற்றும் மறுவாழ்வு அலுவலர்களை கொண்டு அரசுத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.
இந்த பயிற்சி வகுப்பில், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அரசு அலுவலகங்களை அணுக கூடிய வகையிலான ஏற்பாடுகள் குறித்தும், அவர்கள் பாதுகாப்பான முறையில் ஏறும் வகையில் சாய்வுதளம் அமைத்தல், குடிநீர் வசதி, கழிப்பறை அமைத்தல், பிற அலுவலகங்கள் செல்வதற்கு ஏதுவாக பெயர் பலகைகள், வரைபடங்கள் அமைத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான நடைப்பாதைகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், எளிதில் நுழையும் வகையிலான முகப்புகளை வடிவமைத்தல், லிப்ட், எஸ்கிலேட்டர் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.