தொல்லியல் சிறப்பு குறித்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டியில் தொல்லியலின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு கொண்டும் சேர்க்கும் வகையில் கிருஷ்ணகிரி மண்டல அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் துரை மோகன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் பரவியுள்ள தொல்லியல் குறித்த தகவல்களை மாணவர்களுக்குச் சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் வண்ணம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை தொல்லியல் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, வருகிற 8-ந் தேதி வரையில் 6 நாட்கள் நடத்துகிறது. 4 நாள் பயிற்சி மையத்திலும், 2 நாட்கள் களப்பயணமாக திருவண்ணாமலை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர் என்றார்.
பயிற்சியை இந்து அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர், ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு அளித்தார். தொடர்ந்து, தொல்லியல் அலுவலர் பரந்தாமன், கருத்தாளர்கள் சுப்பிரமணியன், காந்திராஜன், ராஜன், பூங்குன்றன், குழந்தைவேல், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுக சீதாராமன், செல்வகுமார், கென்னடி ஸ்ரீதரன், கண்ணன் மற்றும் தயாளன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 60 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர் பார்வதி, இளங்கோவன், அமுதா மற்றும் ஜானகி ஆகியோர் செயல்படுகின்றனர்.