கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்து இணையதள செயலியில் பதிவேற்றம் செய்திட தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சியினை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்துவதற்காக மாவட்ட நிலையிலான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாநில அளவிலான பயிற்றுனர்களால் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கிராம ஊராட்சியில் ஒரு வட்டாரத்திற்கு 2 பேரும், பேரூராட்சிக்கு 2 பேரும், நகராட்சிக்கு 3 பேரும், மாநகராட்சிக்கு 5 பேரும் என மொத்தம் 46 பேர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயலியை பயன்படுத்துவதற்கும், பயோமெட்ரிக் கருவிகளை பயன்படுத்துவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயலியில் விண்ணப்ப படிவம் எப்படி சமர்ப்பிப்பது என்பது பற்றியும், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் எப்படி மாற்றம் செய்வது என்பது குறித்தும், பயோமெட்ரிக் மூலமாக சரி பார்ப்பை உறுதி செய்வது குறித்தும், குடும்ப அட்டை சரிபார்ப்பை உறுதி செய்வது குறித்தும், குடும்ப உறுப்பினர் பதிவு செய்வது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மாவட்ட நிலையிலான பயிற்றுனர்கள் நாளை (புதன்கிழமை) மாவட்டத்தில் உள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். நாளை இல்லம் தேடி கல்வி களப்பணியாளர்களுக்கு முதல்நிலை பயிற்சியும், 14-ந்தேதி 2-ம் நிலை பயிற்சியும், 18-ந்தேதி 3-ம் நிலையிலான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது என்றார்.