நகர் ஊரமைப்பு அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்து பயிற்சி
மனைப்பிரிவுகளுக்கு நகர ஊரமைப்பு அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்து ராணிப்பேட்டை உள்பட 3 மாவட்ட அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூர்
மனைப்பிரிவுகளுக்கு நகர ஊரமைப்பு அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்து ராணிப்பேட்டை உள்பட 3 மாவட்ட அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் மனைப்பிரிவுகளுக்கு நகர் ஊரமைப்புத்துறையின் அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றிற்கு நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதி பெறுவது கட்டாயம். இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மனுதாரர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது தமிழகம் முழுவதும் நகர் ஊரமைப்புத் துறையில் மனைப்பிரிவு அனுமதிக்கு விண்ணப்பித்தல் மற்றும் ஒப்புதல் வழங்குவதற்கு ஒற்றை சாளர முறையில் (ஆன்லைன்) நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் ஒற்றை சாளர முறை நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது. இதனை நடைமுறை படுத்துவது தொடர்பாக நகர் ஊரமைப்புத்துறையின் அலுவலர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பித்தல் தொடர்பான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் வேலூர் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட அலுவலர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. இதனை சேலம் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் ராணி தொடங்கி வைத்தார்.
பயிற்சியின் போது ஒற்றை சாளர முறையில் மனைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல், கோப்புகளின் மீது நடவடிக்கை எடுத்தல், மற்றும் அரசுக்கான கட்டணங்கள் செலுத்துதல், ஆணை வழங்குதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.