வெளியூர் செல்லும் மக்களால் நிரம்பி வழிந்த ரெயில், பஸ்கள்
தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களால் ரெயில், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஊருக்கு செல்லும் மக்கள்
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர். மேலும் வெளியூர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தீபாவளியை கொண்டாடவும் பலர் புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே தொடர் விடுமுறை வந்ததால் நேற்று முன்தினமே திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வெளியூர்வாசிகள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர்.
இதையொட்டி திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, மதுரை, கோவை உள்பட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் செல்கின்றன. இந்த பஸ்களில் செல்வதற்காக நேற்று மதியத்தில் இருந்தே திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகள் குவிய தொடங்கினர். இதனால் திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு சென்ற அனைத்து பஸ்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
ரெயில் படிக்கட்டில் பயணம்
இதேபோல் திண்டுக்கல் வழியாக தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் மட்டுமின்றி சென்னை, பெங்களூரு செல்லும் ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் வாசலில் அமர்ந்து மக்கள் பயணித்தனர். இதற்கிடையே தட்கல் டிக்கெட் எடுப்பதற்காக நேற்று காலையிலேயே ஏராளமானோர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
ரெயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் தட்கல் டிக்கெட் எடுக்க வந்தவர்களிடம் ஆவணங்களை வாங்கி சரிபார்த்து அனுமதித்தனர். ஆனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.