திருத்துறைப்பூண்டி வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து விரைவு ரெயில்களையும் இயக்க நடவடிக்கை - கூடுதல் கோட்ட மேலாளர்


திருத்துறைப்பூண்டி வழியாக  கம்பன் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து விரைவு ரெயில்களையும் இயக்க நடவடிக்கை - கூடுதல் கோட்ட மேலாளர்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:30 AM IST (Updated: 20 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் கோட்ட மேலாளர் கூறினார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் கோட்ட மேலாளர் கூறினார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு...

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் ரெயில் இயக்கப்படுகிறது.

மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இந்த வழித்தடத்தில் ரூ.120 கோடி செலவில் புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து ரெயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான வழித்தடத்தில் ரெயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம், முதுநிலை இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார், கோட்ட பொறியாளர் ரவிக்குமார், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார், துணை தலைமை பொறியாளர்(கட்டுமானம்) வினோத்குமார் ஆகியோர் சிறப்பு ரெயில் என்ஜினில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

பின்னர் கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், இந்த வழித்தடத்தில் வருகிற மார்ச் மாதம் 8-ந் தேதி நிரந்தர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கு பின்னர் கம்பன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களையும் திருத்துறைப்பூண்டி வழியாக படிப்படியாக இயக்குவதற்கு பரிந்துரை செய்யப்படும்' என்றார்.

முன்னதாக ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் இயக்குவதற்கு நன்றி தெரிவித்தனர்.

காலை நேர ரெயில்

அப்போது ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு இயங்கி வந்த கம்பன் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் போன்ற விரைவு ரெயில்களை உடனடியாக இயக்க வேண்டும். திருவாரூர்-காரைக்குடி 'டெமு' ரெயிலை சென்னை செல்வதற்கு வசதியாக இணைப்பு ரெயில் சேவையாக மாற்ற வேண்டும்.

காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் வசதிக்காக காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு காலை நேர ரெயில் இயக்க வேண்டும். அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரும் ரெயிலை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

குறைந்தபட்ச கட்டணம் ரூ.30

37 கிலோ மீட்டர் தூரம் கொண்ட திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி வழித்தடத்தில் கரியாப்பட்டினம், குரவப்புலம், நெய்விளக்கு, தோப்புத்துறை, வேதாரண்யம் ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் பயண நேரம் 1 மணி நேரத்துக்குள்ளாக அமையும் வகையில் ரெயில் இயக்கப்பட உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு பஸ்களில் செல்ல ரூ.40 வரை செலவாகும். தற்போது இயக்கப்பட உள்ள ரெயில்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வரை வசூலிக்கப்பட உள்ளதாகவும், ரெயில்களின் வேகம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பஸ்களை காட்டிலும் கட்டணம் ரூ.10 வரை குறைய வாய்ப்பு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story