மரக்காணம் அருகே பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர் இடமாற்றம்
மரக்காணம் அருகே பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டாா்.
மரக்காணம் அருகே உள்ள வன்னிப்பேர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராமதாஸ். இவர் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு தாமதமாக வருவதாகவும், மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்துவதில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர் தரப்பில் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரணை நடத்தும்படி மரக்காணம் வட்டார கல்வி அலுவலருக்கு திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணன் அறிவுறுத்தினார். அதன்பேரில் மரக்காணம் வட்டார கல்வி அலுவலர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அதன் அறிக்கையை திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
அதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் ராமதாசை வன்னிப்பேர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து எக்கியார்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணன் உத்தரவிட்டார்.