பணியில் மெத்தனமாக இருந்ததாக 3 டாக்டர்கள் மாற்றம்
பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியில் மெத்தனமாக இருந்ததாக 3 டாக்டர்களை மாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார்.
பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியில் மெத்தனமாக இருந்ததாக 3 டாக்டர்களை மாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார்.
அமைச்சர்கள் ஆய்வு
வேலூர் மாவட்டம் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர் சுப்பிரமணியன், அங்கு பணியில் இருந்த மருந்தாளுனரிடம் பாம்பு கடிக்கு மருந்து எடுத்து வரும்படி கூறினார். அதற்கு மருந்தாளுனர் பாம்பு கடிக்கு மருந்தில்லை என்று தெரிவித்தார். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து பணியில் மெத்தனமாக இருந்ததாக வட்டார மருத்துவ அலுவலர் உள்பட 3 டாக்டர்களை மாற்றம் செய்யும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன், பணியில் மெத்தமான இருக்கும் டாக்டர்களை கன்னியாகுமரிக்கு மாற்றுங்கள். அப்போது தான் அவர்கள் ஒழுங்காக பணியாற்றுவார்கள் என்று ஆவேசமாக கூறினார்.
ஆய்வின்போது ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
3 டாக்டர்கள் பணியிட மாற்றம்
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தொடர் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. 38 மாவட்டங்களிலும் அரசு மருந்து கிடங்குகள் உள்ளது.
மருந்துகள் இல்லாத இடத்தில் 104 என்ற இலவச எண்ணிற்கு அழைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொன்னையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. குடிநீர், மின்வசதி, கழிவறை சரியாக இல்லை. இவற்றை சரிசெய்ய வேண்டிய வட்டார மருத்துவ அலுவலர் உள்பட 3 டாக்டர்கள் பணியில் மெத்தனமாக செயல்பட்டதால் மாற்றம் செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய டாக்டர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றார்.