திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்


திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்
x

நெல்லையில் திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் தாங்கள் வசிக்கும் நரசிங்கநல்லூர் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஆடு, மாடு வளர்க்கும் திருநங்கைகளுக்கு கொட்டகை அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு கூறுகையில், 'திருநங்கைகளுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஜெராக்ஸ் கடை வைக்க உதவி வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் திட்டம் மூலம் 49 திருநங்கைகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கடன் உதவி கொடுக்கப்பட்டு உள்ளது. சமூகநலத்துறை மூலம் 66 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் முதுகலை படித்து வரும் சவுபர்ணிகா என்ற திருநங்கைக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது' என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், மாநகர துணை போலீஸ் கமிஷனர் (தலைமையிடம்) அனிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story