சேலத்தில் காதல் திருமணம் செய்த திருநங்கை தற்கொலை முயற்சி-கணவரும் விஷம் குடித்ததால் பரபரப்பு
சேலத்தில் காதல் திருமணம் செய்த திருநங்கை தற்கொலைக்கு முயன்றார். மேலும், அவரது கணவரும் விஷம் குடித்து மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநங்கையுடன் காதல்
சேலம் கிச்சிப்பாளையம் தேசிய புனரமைப்பு காலனியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25). இவருக்கு ஸ்ரேயா (28) என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். பிறகு காதலர்களான அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, தாதகாப்பட்டி பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். ஆனால் திருநங்கையை ராம்குமார் திருமணம் செய்து கொண்டது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை.
இதனிடையே, அவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும், இதனால் திருநங்கையை விட்டு விலகுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக திருநங்கை ஸ்ரேயாவுக்கும், ராம்குமாருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
இதில் விரக்தி அடைந்த ராம்குமார், ஸ்ரேயாவை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருநங்கை, கணவரை சந்தித்து செலவுக்கு பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இந்தநிலையில், நேற்று மதியம் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஸ்ரேயாவை ராம்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட திருநங்கை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Transgender woman married for love in Salem commits suicide-husband gets poisoned
இதனிடையே, மன உளைச்சலில் இருந்த ராம்குமார், பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்கள் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநங்கை ஸ்ரேயா, ராம்குமாரை காதலிக்கும்போது அவருக்கு அதிகபடியான பணம் கொடுத்து வந்துள்ளார். மேலும் ஒரு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி ராம்குமார் சிறையில் இருந்தபோது, அவரை வெளியே கொண்டு வருவதற்கு திருநங்கை ஸ்ரேயா அதிக முயற்சி எடுத்ததாகவும், ஆனால் தற்போது தன்னை விட்டு நிரந்தரமாக ராம்குமார் பிரிந்து சென்றதால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் திருநங்கை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்து வருவதை அறிந்த திருநங்கை தற்கொலைக்கு முயன்றதும், மறுபுறம் திருநங்கையின் கணவரும் விஷம் குடித்த சம்பவமும் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.