போக்குவரத்து தொழிலாளர்கள் ஊர்வலம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊர்வலம் நடைபெற்றது.
போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை விளக்கி அரசு போக்குவரத்து கழகங்களில் வரவு, செலவுக்கும் இடைப்பட்ட தொகை அரசு கழகங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுக்கு எழுப்பி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் அடங்கிய 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை அரசு உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் வாயிற்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. அதன்படி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு வாயிற்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. வாயிற்கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மண்டல தலைவர் கார்த்திக்கேயன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மண்டல பொதுச்செயலாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் செந்தில்நாதன், சாமிஅய்யா, முத்துக்குமார், லோகநாதன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து புதுக்கோட்டை போக்குவரத்து பணிமனையிலிருந்து மண்டல அலுவலகம் வரை போக்குவரத்து தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றனர். முடிவில் ஆனந்த் நன்றி கூறினார்.