போக்குவரத்து ஊழியர்கள் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து ஊழியர்கள் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம்
x

ஊதிய ஒப்பந்தம் 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்து ஊழியர்கள் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 1977-ம் ஆண்டு முதல் 40 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம், தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 3 ஆண்டு ஒப்பந்தம் என்பதை 4 ஆண்டாக மாற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி., மற்றும் சி.ஐ.டி.யூ. சங்கங்கள் சார்பில் மாநிலந்தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

தஞ்சை ஜெபமாலைபுரம் நகர கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மத்திய சங்க பொருளாளர் ராமசாமி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மத்திய சங்க பொருளாளர் ராஜமன்னன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா, போக்குவரத்து ஏ.ஐ.டி.யூ.சி. சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 3 ஆண்டுகளே இருக்க வேண்டும். ஓய்வுக்கால பண பலன்கள் 2020 மே மாதம் முதல் நிலுவையில் உள்ளதால் அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 6 ஆண்டுகளுக்கு மேல் நிறுத்தி வைத்துள்ளதை வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதேபோல் தஞ்சை கரந்தை பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. மத்திய சங்க தலைவர் காரல்மார்க்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் போக்குவரத்து சங்க நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பாஸ்கர், சவுந்தர்ராஜன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக வெங்கடேசன், மாணிக்கம், பாலசுப்பிரமணியன், மத்திய சங்கத் தலைவர் சேகர், கவுரவ தலைவர்.சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.




Next Story