சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி


சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி
x

சென்னையில் நேற்று நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய கோரியும், நிரந்தர காலிப்பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6-வது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையரக அலுவலகத்தில் தொழிலாளர் தனி இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப்., பாட்டாளி தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 8 போக்குவரத்து கழகங்களின் பொதுமேலாளர் அளவிலான நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திருப்தி இல்லை

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் அ.சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் 16 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் தற்போது 812 டிரைவர்-கண்டக்டர் காலிப்பணியிடங்களை அரசு நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மொத்த காலிப்பணியிடத்தை ஒப்பிடும் போது மிகவும் குறைவான எண்ணிக்கை. இது திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி எத்தனை வண்டிகள் உள்ளனவோ அதற்கு தகுந்த அளிவில் கூட இல்லை. இது மிகவும் தவறான, கண்டனத்துக்குரிய விஷயம்.

எனவே, எல்லா காலிப்பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரிசு அடிப்படையிலும் அனைத்து வகை பணிகளையும் வழங்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழக நிர்வாகங்கள் சார்பில் அளிக்கப்பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லை.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

தொழிலாளர் நலத்துறை சார்பிலும் பேச்சுவார்த்தை திருப்தி இல்லை என்று தெரிவித்து விட்டனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்களை பங்கேற்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை இதே போன்று இழுத்தடிக்கப்பட்டால், தொழிலாளர்களின் கோபத்துக்கு ஆளாகி போராட்டத்தில் போய் முடியும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story