வலையில் சிக்கிய காட்டு பன்றி மீட்பு
களக்காடு அருகே வலையில் சிக்கிய காட்டு பன்றி மீட்கப்பட்டது.
களக்காடு:
களக்காடு பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை இரவு நேரங்களில் உணவுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளைநிலங்களில் புகுந்து நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று அதிகாலையில் கீழவடகரை மலையடிவார புதர்களில் இருந்து வந்த காட்டு பன்றிகள் கூட்டம் பூலாங்குளம் பத்தில் நுழைந்து வாழைகளை நாசம் செய்தன. இதில் ஒரு பன்றி விளைநிலத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த வலையில் சிக்கிக்கொண்டது.
இதுபற்றி கீழவடகரை கிராம வனக்குழு தலைவர் பாலன் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் களக்காடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று வலையில் சிக்கி தவித்த காட்டு பன்றியை உயிருடன் மீட்டு, வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.