நடவு பணி
கும்பகோணத்தில் எந்திரம் மூலம் விவசாயிகள் நடவு பணி நடந்தது.
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் சம்பா நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாற்றங்கால் அமைத்து விதை தெளிப்பு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர். ஆனால் விவசாய பணிகளுக்கு போதிய அளவு ஆட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து எந்திரங்கள் மூலம் நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், 100 நாள் வேலை போன்ற அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தால் விவசாய பணிகளை மேற்கொள்ள யாரும் முன் வருவதில்லை. அது மட்டுமல்லாமல் விவசாய பணிகளை மேற்கொள்ள ஆட்கள் வருவது கிடையாது. எல்லோரும் விவசாயமில்லாத மாத சம்பள வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூலி ஆட்களை கொண்டு நடவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது நேர விரையமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது. இதனால் மாற்று ஏற்பாடாக எந்திரங்களை கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. எந்திரங்கள் மூலம் நடவு பணிகளை செய்யும் போது நேரம் மிச்சமாவதுடன் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களை கொண்டு நடவு பணிகளை முடிக்க முடிகிறது. எனவே அரசு மானிய விலையில் அதிக எண்ணிக்கையிலான நடவு எந்திரங்கள் மற்றும் விவசாய கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றார்.