"வந்தே பாரத் ரெயிலில் சென்றது விமானத்தில் பறப்பது போல் இருந்தது"


வந்தே பாரத் ரெயிலில் சென்றது விமானத்தில் பறப்பது போல் இருந்தது
x
தினத்தந்தி 26 Sept 2023 1:15 AM IST (Updated: 26 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

‘வந்தே பாரத்’ ரெயிலில் சென்றது விமானத்தில் பறப்பது போல் இருந்ததாக பயணிகள் கருத்து தெரிவித்தனர்.

திண்டுக்கல்

நவீன சொகுசு ரெயில்

நெல்லை-சென்னை இடையே 'வந்தே பாரத்' என்ற நவீன சொகுசு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் கட்டணம் இல்லாமல் சிறப்பு ரெயிலாக 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்பட்டது.

அதையடுத்து நேற்று சென்னையில் இருந்து நெல்லைக்கு 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்பட்டது. அந்த ரெயில் திண்டுக்கல்லுக்கு இரவு 7.55 மணிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளிடம் பயண அனுபவம் குறித்து கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

சீதாராம் (வியாபாரி, சென்னை) :- 'வந்தே பாரத்' ரெயிலில் பயணிகளுக்கு நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தேஜஸ் ரெயிலில் வழங்கப்படுவது போன்றே இந்த ரெயிலிலும் உணவு வழங்கப்படுகிறது. அதன் தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி என்பதால் ஜன்னல் விரிப்புகள், இருக்கை விரிப்புகளை அடிக்கடி மாற்ற வேண்டும். கிருமிநாசினி தெளித்து ரெயில் பெட்டிகளை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். இந்த ரெயிலில் பயணித்தது விமானத்தில் பறப்பது போன்ற அனுபவத்தை கொடுத்தது.

விரைவான பயணம்

சரவண பெருமாள் (என்ஜினீயர், திண்டுக்கல்) :- வைகை எக்ஸ்பிரஸ், தேஜஸ் ரெயில் ஆகியவற்றின் கலவை தான் 'வந்தே பாரத்' ரெயில். ரெயிலில் வழங்கப்பட்ட உணவு நன்றாக இருந்தது. சென்னையில் இருந்து நெல்லைக்கு விரைவாக செல்ல விரும்புபவர்களுக்கு இந்த ரெயில் ஒரு வரப்பிரசாதம். இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கிறது. கட்டணமும் ஏற்புடையதாக தான் இருக்கிறது. ரெயில் வேகத்தை பொறுத்தவரை விமானத்தில் செல்வது போல் இருக்கிறது.

ஜெயச்சித்ரா (இல்லத்தரசி, திண்டுக்கல்):- எங்கள் மகளை பார்ப்பதற்காக சென்னை சென்றுவிட்டு 'வந்தே பாரத்' ரெயிலில் திண்டுக்கல்லுக்கு திரும்பி வந்தேன். ரெயில் பயணம் என்றாலும் வயதானவர்களுக்கு சற்று சிரமமாக தான் இருக்கும். ஆனால் 'வந்தே பாரத்' ரெயில் அந்த கவலையை போக்கிவிட்டது. எந்தவித சிரமமும் இன்றி ரெயிலில் பயணித்தேன். சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு 5 மணி நேரத்துக்குள் வந்துவிட்டோம்.

தாமதமாக வழங்கப்படும் உணவு

கிரேஸ் (ஐ.டி. ஊழியர், சென்னை) :- மற்ற ரெயில்களைவிட 'வந்தே பாரத்' ரெயிலில் பயணிப்பது மிகவும் வசதியாக இருக்கிறது. ஆனால் கை கழுவும் கோப்பை (வாஸ் பேசின்) கழிப்பறைக்குள் மட்டும் தான் இருக்கிறது. இதனால் சாப்பிட்ட பின் கழிப்பறைக்கு சென்று கை கழுவ வேண்டிய நிலை உள்ளது. எனவே கழிப்பறைக்கு வெளியே கை கழுவும் கோப்பையை கூடுதலாக வைக்க வேண்டும்.

மேலும் இரவு உணவாக சப்பாத்தி, சிக்கன் கிரேவி, புலாவ், குலாப் ஜாமூன் ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் தாமதமாக கொடுக்கப்பட்டது. இதனால் எங்கள் குழந்தைகள் பசியால் நீண்ட நேரம் தவித்தனர். எனவே தாமதமின்றி உணவு வழங்க வேண்டும். மற்றபடி பயண அனுபவம் நன்றாகவே இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story