டிராவல்ஸ் அதிபர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 25 பவுன் நகைகள்-ரூ.10 லட்சம் கொள்ளை
திருச்சி கோட்டை பகுதியில் முகமூடி கும்பல் டிராவல்ஸ் அதிபர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 25 பவுன் நகைகள்-ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
மலைக்கோட்டை, ஜூலை.3-
திருச்சி கோட்டை பகுதியில் முகமூடி கும்பல் டிராவல்ஸ் அதிபர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 25 பவுன் நகைகள்-ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
டிராவல்ஸ் அதிபர்
திருச்சி கோட்டை போலீஸ் சரகம் சஞ்சீவி நகரில் உள்ள நேரு நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி கற்பகவல்லி (வயது 40). இவர் எம்.கே.பி. என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். கற்பகவல்லியின் கணவர் நாராயணன் ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கற்பகவல்லி, அவரது மகள் நந்தினி, மகன்கள் நவீன், பிரதீப், மாமியார் தமிழரசி, நந்தினியின் கணவர் கிருபாகரன் ஆகியோர் இருந்தனர். அவர்களுடன் கார் டிரைவர் பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த ஜியாவுதீன் (34) என்பவரும் இருந்துள்ளார்.
முகமூடி கும்பல் நுழைந்தது
இரவு 11 மணி வரை வீட்டின் கதவை பூட்டாமல் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று 12 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் தலையில் குல்லாவும், முகமூடியும் அணிந்து இருந்தனர். திடீரென்று, அந்த கும்பல் வீட்டுக்குள் புகுந்ததால் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
தொடர்ந்துஅந்த கும்பல் கத்தினால் குத்திவிடுவோம் என கத்தியை காட்டி மிரட்டியபடி கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டனர். பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்த அனைவரின் கைகளையும் கட்டி முட்டி போட வைத்தனர். தகவல்களை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக, அனைவரிடமும் இருந்த செல்போன்களையும் பறித்து வைத்துக்கொண்டனர்.
கத்தியால் கிழித்தனர்
இதற்கிடையில் கார் டிரைவர் ஜியாவுதீன் மற்றும் பிரதீப் ஆகியோர் அந்த கும்பலை சேர்ந்த ஒருவனை பிடிக்க முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களது கைகளை கத்தியால் கிழித்தனர். பின்னர் அவர்களையும் கட்டிப்போட்டனர்.
பினனர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். கற்பகவல்லியின் வீடு அருகே வேறு வீடுகள் இல்லை. சிறிது தூரத்தில் தான் வீடுகள் உள்ளன. இதனால் கொள்ளை சம்பவம் நடந்தது பக்கத்து வீட்டினருக்கு தெரியவில்லை.
போலீசுக்கு தகவல்
இதற்கிடையில் வீட்டில் இருந்தவர்கள் தவழ்ந்து, தவழ்ந்து வந்து கதவை வேகமாக இடித்து தள்ளி திறந்தனர். அதன்பின் காவல் கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் விரல்ரேகை நிபுணர்கள் வீட்டில் உள்ள தடயங்களை சேகரித்துக்கொண்டனர். வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
4 பேரை பிடித்து விசாரணை
தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கற்பகவல்லியின் வீட்டில் ஏற்கனவே ஒருவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். அவரை பணியில் இருந்து நீக்கி விட்டனர். அவருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.