விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மோதல்
கோட்டைப் பட்டினத்தில் விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மோதலில் ஈடுபட்டனர். இதில், 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடுக்கடலில் மீனவர்கள் மோதல்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது 3 விசைப்படகுகளில் சென்ற 12 மீனவர்கள் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் நடுக்கடலில் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் 3 விசைப்படகையும் அதில் சென்ற 12 மீனவர்களையும், நாட்டுப்படகு மீனவர்கள் சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விசைப்படகு மீனவர்களின் குடும்பத்தார்கள் மற்றும் மீனவர்கள் விசைப்படகுகளை விடுவிக்கக்கோரியும், தாக்குதல் நடத்திய நாட்டுப் படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம், இன்ஸ்பெக்டர் குணசேகரன், மணமேல்குடி தாசில்தார் சிவக்குமார், கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே விடுவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து, தெற்கு புதுக்குடி சென்று நாட்டுப் படகு மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 12 மீனவர்களையும் மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இதேபோல் நாட்டுப் படகு மீனவர்களும் தெற்குபுதுக்குடி கிராமத்தில் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிகிச்சை
இந்த மோதலில் இருதரப்பு மீனவர்களும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து மீமிசல் கடலோர காவல் குழுமத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல் போராட்டத்தினால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.