சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வை தொடங்கியது அறநிலையத்துறை விசாரணை குழு!
தீட்சிதர்கள் எதிர்ப்பை மீறி சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்குகளை ஆய்வு செய்யும் பணியை அறநிலையத்துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
சிதம்பரம் ,
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் (புதன்கிழமை) ஆய்வு செய்ய உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
இதனையடுத்து, சிதம்பரம் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு இன்று காலை தொடங்கியது.
அறநிலையத்துறையினர் ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள் உடன் நேற்று அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்நிலையில், கோயிலின் கணக்குகளை ஆய்வு செய்யும் பணியை அறநிலையத்துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
அறநிலையத்துறை கோயில் நிர்வாக வருவாய் அலுவலர் சுகுமார், துணை ஆணையர் அரவிந்தன், இணை ஆணையர்கள் லெட்சுமணன், நடராஜன், மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் அடங்கிய கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட அறநிலையத்துறை விசாரணைக் குழுவினர் இன்றும் நாளையும் நேரில் ஆய்வு செய்வார்கள்.