முதியோர்களை கனிவுடன் நடத்த வேண்டும்:மாநில மகளிர் ஆணைய தலைவி பேச்சு


முதியோர்களை கனிவுடன் நடத்த வேண்டும்:மாநில மகளிர் ஆணைய தலைவி பேச்சு
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதியோர்களை கனிவுடன் நடத்த வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி அறிவுறுத்தினார்.

தேனி

உறுதிமொழி ஏற்பு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், உலக முதியோர் கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி, உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி முன்னிலையில், அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அப்போது மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி பேசியதாவது:-

முதியோர்களை பாதுகாக்க வேண்டும். முதியோர்களை கனிவுடன் நடத்த வேண்டும் என நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தர வேண்டும். முதியோர்களுக்கு ஏற்படும் எதிர்ப்பு போக்கை மாற்ற வேண்டும் என்பதற்காக உலக சுகாதார நிறுவனம் சார்பில், முதியோரை பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 15-ந் தேதியை முதியோர் கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு தினமாக கடந்த 2006-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் முதியோர்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும், முதியோர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களிடம் சமூக நலத்துறை சார்பில் தொடர்ச்சியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வரும் காலங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும். முதியோர்களை மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ யாரும் காயப்படுத்தக்கூடாது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2013-ன் கீழ் மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பெண் தலைவர்கள், துணைத்தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி கலந்துகொண்டு பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story