மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சை
டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமநத்தம்:
திட்டக்குடி அருகே உள்ள கீழ்ஆதனூர் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண்ணுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அந்த இளம்பெண், மீண்டும் கர்ப்பமானார். 3-வது குழந்தையை பெற்றெடுக்க விருப்பம் இல்லாத அந்த இளம்பெண், கருவை கலைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் டாக்டரிடம் காண்பிக்காமல் தானாகவே திட்டக்குடியில் உள்ள ஒரு மருந்தகத்துக்கு சென்றார். அங்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதையடுத்து கரு கலைந்து விட்டது. இருப்பினும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொருப்பு) ஷோபானந்தம், மருந்து ஆய்வாளர் நாராயணன் ஆகியோர் திட்டக்குடி கடை வீதியில் உள்ள மருந்தகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.