விவசாய நிலங்களில் நட்டு வளர்க்க இலவச மரக்கன்றுகள்


விவசாய நிலங்களில் நட்டு வளர்க்க இலவச மரக்கன்றுகள்
x
திருப்பூர்


உடுமலை பகுதியில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நட்டு வளர்க்கும் வகையில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுவதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பசுமைப் போர்வை

மரம் வளர்ப்பு என்பது அவசியமானதாக உள்ள நிலையில் அதற்கென பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டு வருகிறது.சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடுதல், பொது இடங்களில் நட்டு வளர்த்தல், பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் வளர்த்தல் என பல வகைகளில் மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.பல நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளிலும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பு என்பது சாத்தியமில்லாத சூழல் உள்ளது.

இந்தநிலையில் விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் பசுமைப் போர்வை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விளை நிலங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பதன் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பறவைகள் வசிப்பதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது.

உழவன் செயலி

விளைநிலங்களுக்குள் நுழையும் காற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு பயிர்கள் பாதுகாக்கப்படுகிறது. மண் அரிப்பு கட்டுப்படுத்தப்பட்டு மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விவசாயிகளுக்கு மொத்தமாக ஒரு வருவாயை இந்த மரங்கள் ஈட்டித் தருகிறது. அந்தவகையில் தற்போது உடுமலை வட்டார விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் 22 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் கொண்டு வரப்பட்டு உடுமலை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதில் 5,000 தேக்கு, 12,350 மஹோகனி, 300 நெல்லி, 2,000 செம்மரம், 1,600 நாவல், 1,250 தான்றி மரக்கன்றுகள் உள்ளது. விவசாயிகள் உழவன் செயலி மூலம் முன் பதிவு செய்து சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 1 உள்ளிட்ட ஆவணங்களுடன் வேளாண்மைத்துறை அலுவலகத்தை அணுகி உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து வகை மரக்கன்றுகளும் கலந்து ஒரு ஏக்கருக்கு 50 மரக்கன்றுகள் வழங்கப்படும். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதால் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story