மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வேதாரண்யம் தாலுகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா தாணிக்கோட்டகம் பகுதியில் உள்ள தஞ்சை- கோடியக்கரை நெடுஞ்சாலையில் நடந்தது. விழாவிற்கு உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் மதன்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் கூட்டுறவு வங்கி தலைவர் உதயம்முருகையன் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு பணியினை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, சாலை ஆய்வாளர் கவிதா, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், கூட்டுறவு வங்கி இயக்குனர் சோழநம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.