தஞ்சை மாவட்டத்தில் 8 ஆயிரம் மரக்கன்று நடும்பணி
நெடுஞ்சாலைத்துறை சார்பில் தஞ்சை மாவட்டத்தில் 8 ஆயிரம் மரக்கன்று நடும்பணி தொடங்கி உள்ளது.
தஞ்சாவூர்;
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடப்பட உள்ளன. இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.தஞ்சை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் தஞ்சை- வல்லம் சாலை, புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்ட பொறியாளர் கீதா தலைமை தாங்கினார். தஞ்சை ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருளானந்தசாமி, வட்டார வளர்ச்சி அதிகாரி பிரபாகரன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, தி.மு.க. நகர செயலாளர் கல்யாணசுந்தரம், கவுன்சிலர் சுந்தர்ராஜன், ஒப்பந்த பணி மேற்பார்வையாளர் திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் மோகனா வரவேற்றார்.இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மாவட்டத்தில் உள்ள 8 உட் கோட்டங்களிலும் ஒரு கோட்டத்திற்கு தலா 1000 மரக்கன்றுகள் வீதம் நடப்பட்டு, அவற்றை சுற்றிலும் மூங்கில்களால் ஆன கூண்டு அமைக்கப்பட்டு உரிய முறையில் பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.என்றார்.