விரிவாக்க பணிகளுக்காக வெட்டி சாய்க்கப்படும் நிழல் தரும் மரங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்மை செய்யும் மரங்கள்
மரங்கள் இயற்கை நமக்கு தந்த வரம். மரங்கள் எல்லா வகையிலும் மனித சமுதாயத்திற்கு பல வகையில் நன்மை செய்து வருகிறது. மழை வளத்ததை பெற்றிட மரங்கள் அவசியமாகிறது. அழகான பாதுகாப்பான நிழல் தரும் மரங்கள் கோடைகாலத்தின் வரப்பிரசாதங்கள் என்றே கூறலாம். இவ்வாறு மரங்களின் பயன்கள் எண்ணற்றவையாகும்.
தொழில் வளர்ச்சியினால் மாசடைந்த சுற்றுச்சூழலினை தூய்மையாக்குபவை மரங்கள் தான். ஆக்சிஜன் தொழிற்சாலையாக செயல்படும் மரங்கள் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தருகிறது.
பாதுகாக்க திட்டம் இல்லை
நாகரிக வளர்ச்சியாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. விரிவாக்க பணிகளுக்காக சாலையோரம் வானுயர வளர்ந்து நிற்கும் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகிறது.
மீண்டும் மரக்கன்றுகளை நடுவதற்கோ, அதனை பாதுகாப்பதற்கோ எந்த திட்டமும் இல்லை. சமீப காலமாக மரங்கள் அதிகளவில் வெட்டி சாய்க்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையோரங்கள் மரங்கள் இன்றி வெட்ட வெளியாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள் நிழலுக்கு கூட எங்கேயும் ஒதுங்கி நிற்க வழியில்லாமல் உள்ளது.
இருவழிச்சாலை
திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் திட்டத்தில் சாலையோரம் இரு புறங்களிலும் இருந்த மரங்கள் முற்றிலும் வெட்டி அகற்றப்பட்டது. மன்னார்குடி, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கும் செல்லும் சாலையோரங்களில் மட்டும் மரங்கள் சற்று எஞ்சி நிற்கிறது.
இவ்வாறு எஞ்சி நிற்கும் மரங்களும் விளம்பர மாடல்களாக மாறி வருகின்றன. மரங்களின் மீது ஆணி அடித்து விளம்பர பலகைகளை இரக்கமின்றி தொங்க விடுகிறார்கள். சாலையோர மரங்கள் நெடுஞ்சாலைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. மரங்கள் வளர்க்க முயற்சி செய்யாத நிலையில், இருக்கின்ற மரங்களை பாதுகாக்க யாரும் முன்வருதில்லை என்பது இயற்கை மீது பற்று கொண்டவர்களின் வேதனையாக கருத்தாகும்.
விதியை பின்பற்றுவதில்லை
இதுகுறித்து இயற்கை ஆர்வலர் வனம் கலைமணி கூறியதாவது:-
அரசாங்கம் சார்பில் சாலை ஓரங்களில் மரங்களை நட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பராமரிக்கப்படுவது இல்லை. இது ஒரு புறம் இருக்க நம் முன்னோர்கள் சாலை ஓரங்களில் நட்டு வளர்த்த பல நூறாண்டு கால வயது கொண்ட மரங்களையும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பிடுங்கி தள்ளி விடுகிறார்கள்.
வழிபோக்கர்களுக்கும், பறவைகளுக்கும் பழங்களையும் நிழலையும் தந்து ஒரு ரம்மியமான சூழலையும் தரும் மரங்கள் இவ்வாறு வெட்டி வீழ்த்தப்படுவது மிகுந்த வேதனைக்குரியது. சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் நட வேண்டும் என்ற விதியை யாரும் பின்பற்றுவதில்லை.
ஆயுட்காலம் குறையும்
பெயருக்கு மரங்களை நட்டுவிட்டு ஆவணப்படுத்தி கொள்வதோடு சரி. முன்னேற்றம் வளர்ச்சி என்ற பெயரில் இது போன்ற செயல்களால் சூழலியல் சமநிலை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் மரங்களுக்கும் உள்ள நெருக்கம் குறைந்து பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதை நம்மால் உணர முடிகிறது. வெளிநாடுகளில் மரங்களை வேறொரு இடத்திற்கு மாற்றி வைக்கும் தொழில்நுட்பம் உள்ளது. எந்திரங்களை கொண்டு சிறப்பாக மரங்களை மாற்றி நடுகிறார்கள்.
மரங்களில் ஆணி அடிப்பதால் மரங்களின் ஆயுட்காலம் குறைந்து அதனுடைய வலிமை குறைகிறது. தொடர்ந்து ஆணி அடிக்கப்படும் மரம் போரை விழுந்து புயல் வெள்ளம் போன்ற காலங்களில் எளிதில் சாய்ந்து விடுகிறது. இது போன்று சத்தம் இல்லாமல் மரங்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் மிகுந்த கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.