இசை, நடன கலைஞர்களுடன் நடுக்கல் கண்டுபிடிப்பு
போச்சம்பள்ளி அருகே இசை கலைஞரும், நடன கலைஞரும் சேர்ந்து காணப்படும் நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்தூர்
போச்சம்பள்ளி அருகே இசை கலைஞரும், நடன கலைஞரும் சேர்ந்து காணப்படும் நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பண்ணந்தூர் அருகே புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரிச்சந்திரன் கோவிலில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் மற்றும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இசை கலைஞரும், நடன கலைஞரும் சேர்ந்து காணப்படும் நடுக்கல்லை கண்டுபிடித்தனர். இது குறித்து குழுவினர் கூறியதாவது:-
இந்த கோவிலில் இசைக்கலைஞர், நடனக்கலைஞரும் இடம்பெற்றுள்ள நடுகல் உள்ளது. இந்த நடுகல் 200 முதல் 300 ஆண்டுகள் முற்பட்டதாகும். இந்த நடுகல்லில், இசைக்கலைஞர் கையில் சிறிய தப்பட்டை ஒன்றை இசைத்தவாறு உள்ளார். அவர் மேல்சட்டை, கீழே வேட்டியும் அணிந்தும், காதுகளில் பெரிய அளவிலான குண்டலங்கள் காட்டப்பட்டுள்ளன. இவர் இசைக்கும் போதே கால்கள் அசைந்து ஆடுவது போல் உள்ளது.
ஆபரணங்கள் உடைகள்
இதன் அருகில் குருமன் பழங்குடி மக்களின் நடனத்தை ஆடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் ஆடை, ஆபரணங்கள் உடைகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இவர் அணிந்துள்ள உடை கழுத்தில் இருந்து இடுப்பு வரை தற்கால தெருக்கூத்து கலைஞர்கள் போன்ற ஒரே உடையாக காட்டப்பட்டுள்ளது.
இந்த நடுகல் இசை கலைஞர் இசைப்பது போன்றும், நடன கலைஞர் நடனம் ஆடுவது போன்றும் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடுகல் கண்டறிவது இதுவே முதல் முறையாகும். தப்பட்டை மற்றும் சேவை ஆட்டம் போன்றவை குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். இது குருமன்ஸ் இன மக்களுடைய நடுக்கல் என கூறலாம். இவ்வாறு அவர் கூறினர்.