போக்குவரத்து நெரிசலை குறைக்க சனி, ஞாயிற்றுக்கிழமையில் சோதனை முயற்சி
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வாகன நெரிசலை குறைக்க சனி ஞாயிற்றுக்கிழமையில் போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வாகன நெரிசலை குறைக்க சனி ஞாயிற்றுக்கிழமையில் போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசல்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் முதல் பெங்களூரு, திருப்பதி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-
சோதனை முயற்சி
கிரீன் சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை குறைக்க வேலூர் பழைய பெங்களூரு சாலை மற்றும் ஆரணி சாலையில் இருந்து காட்பாடி நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேஷனல் சர்க்கிள் அருகே உள்ள அணுகு சாலை வழியாக செல்ல வேண்டும். இலகு ரக வாகனங்கள் சிறிய பாலத்தின் வழியாகவும், கனரக வாகனங்கள் ரெயில்வே பாலம் வழியாகவும் புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடிக்கு செல்ல வேண்டும்.
அதேபோல் சென்னையில் இருந்து வேலூருக்கு வரும் பஸ்கள் அனைத்தும் கிரீன் சர்க்கிளை அடுத்துள்ள அணுகு சாலை வழியாக ரெயில்வே பாலத்தின் கீழ் சென்று புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இந்த மாற்றம் போக்குவரத்து குறைவாக காணப்படும் சனி, ஞாயிற்றுக்கிழமையில் சோதனை முயற்சி அடிப்படையில் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்தின் பேரில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.