5 மாதத்தில் 5 ஆயிரம் பேருக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்


5 மாதத்தில் 5 ஆயிரம் பேருக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்
x

புதூர்நாடு மற்றும் ஏலகிரி மலையில் 5 மாதத்தில் 5 ஆயிரம் பேருக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

சாதி சான்றிதழ்

திருப்பத்தூர் தாலுகா பகுதியில் உள்ள புதூர்நாடு மற்றும் ஏலகிரிமலையில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் வசிக்ககூடிய பகுதிகளுக்கு அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தி பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்துறையின் சார்பில் சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி புதூர்நாடு மலை கிராமத்தை சேர்ந்த வெங்கடபதி என்பவரின் 4 வயது மகள் சிவானி என்ற சிறுமிக்கு சாதி சான்றிதழை வழங்கினார். அ.நல்லதம்பி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

5 ஆயிரம் பேருக்கு

பழங்குடியின மக்கள் கல்வி பெறுவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பழங்குடியின சாதிச் சான்று மிக மிக முக்கியம். சாதி சான்றிதழ் இல்லை என்றால் மாணவ, மாணவிகள் கல்வியை தொடர முடியவில்லை. வேலைவாய்ப்பு பெற முடியவில்லை. அடுத்த தலைமுறை பாதிக்கப்படும். அவர்களுடைய வளர்ச்சியை எந்த காலகட்டத்திலும் தடுக்கக்கூடாது என்பதற்காக உடனடியாக அவர்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்க ஆய்வு கூட்டம் நடத்தி அனைதது அலுவலர்களையும் கள ஆய்விற்கு அனுப்பி சாதி சான்றிதழ்கள் உடனடியாகவழங்கப்பட்டது.

தற்பது 5 ஆயிரமாவது சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மலைவாழ் மக்கள் அனைவரும் கல்வியை பெற வேண்டும். பெண்கள் குறைந்த பட்சம் பட்டப் படிப்பையாவது படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பானு, முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story