வீடுகளை இழந்து குடிசைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள்: கட்டுமான பணிகள் முடிந்தும் கைசேராத புதிய குடியிருப்புகள்


வீடுகளை இழந்து குடிசைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள்:  கட்டுமான பணிகள் முடிந்தும் கைசேராத புதிய குடியிருப்புகள்
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள் கட்டுமான பணிகள் முடிந்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளதால், குடிசைகளில் பனி, மழைக்கு குழந்தைகளுடன் பரிதவிக்கின்றனர்.

தேனி

பழங்குடி மக்கள்

மனிதர்களுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க வீடு இவை மூன்றும் அத்தியாவசியம். அந்த வகையில் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மலைப்பகுதிகளில் குடிசைகள் அமைத்து வசித்த பழங்குடியின மக்களுக்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சளாறு அணை அருகில் ராசிமலைநகரில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முயற்சியால் இந்த பழங்குடியின மக்களுக்கு 26 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

நாளடைவில் அந்த வீடுகள் சேதம் அடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலைக்கு சென்றன. இதனால் தங்களின் வீடுகளை பராமரிக்க வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை வைத்தனர். சேதம் அடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டமிடப்பட்டது.

புதிய வீடுகள்

அதன்படி குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராசிமலைநகரில் 32 வீடுகளின் கட்டுமான பணிகள் தொடங்கின. இதற்காக மக்கள் வசித்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. புதிய குடியிருப்பு கட்டும் பணிகள் விரைவில் முடிந்து தங்களுக்கு ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிக குடிசைகள் அமைத்து மக்கள் வசிக்கத் தொடங்கினர்.

கட்டுமான பணிகள் நடந்தபோது தரமற்ற நிலையில் கட்டப்படுவதாக மக்கள் புகார் எழுப்பினர். இதையடுத்து கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதிகாரிகளின் கண்காணிப்பில் பணிகள் நடந்தன. 32 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டை கடந்து விட்டது. இன்னும் அந்த மக்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை.

பங்களிப்பு தொகை

கட்டப்பட்ட புதிய வீடுகள் கண்ணுக்கு முன்பு அழகாக காட்சி அளித்த போதிலும் அதற்குள் குடியேற முடியாமல் மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர். குடிசைகளில் 3 ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் மழை, பனி காலங்களில் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். குறிப்பாக பலத்த மழை, கடுமையான பனி காலங்களில் அங்குள்ள குழந்தைகளும் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் கேட்டபோது அவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

சாந்தி:- எங்கள் கிராமத்தை சேர்ந்த அனைவரும் கூலி வேலை பார்ப்பவர்கள். ஒரு காலத்தில் மலைகளில் சுற்றித் திரிந்தும், ஆங்காங்கே குடிசைகள் அமைத்தும் வாழ்ந்தோம். எங்களுக்கு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இலவசமாக வீடுகளை கட்டிக் கொடுத்தார்கள். அந்த வீடுகள் சேதம் அடைந்ததால் அவற்றை இடித்துவிட்டு அரசு புதிய வீடுகளை கட்டியது.

தற்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.2½ லட்சம் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அவ்வளவு பணம் எங்களிடம் இருந்தால் நாங்களே பழைய வீடுகளை சீரமைத்து இருக்க மாட்டோமா? அன்றாட வாழ்வாதாரத்துக்கே சிரமப்படும் எங்களுக்கு பங்களிப்பு தொகை செலுத்துவதில் இருந்து அரசு விலக்கு ஏற்படுத்தி கட்டி முடித்த வீடுகளை ஒப்படைக்க வேண்டும்.

ஓலைக்குடிசை

காமாட்சி:- எனக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. தற்காலிக ஓலைக்குடிசையில் வசிக்கிறேன். இரவு தூங்க முடியாமல் தவிக்கிறேன். கட்டிய வீட்டை ஒப்படைத்தால் கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ்ந்து விடுவேன். என்னைப் போன்றே இங்குள்ள வயதானவர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். முதுமையின் உடல் உபாதைகளை கருத்தில் கொண்டு தாமதமின்றி வீடுகளை ஒப்படைக்க வேண்டும்.

வசந்தா:- இந்த வீடுகளை கட்டும் போது நாங்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டோம். ஆசை, ஆசையாக பணி செய்தோம். புதிய வீட்டில் குடியேற போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் பணிகள் முடிந்து 1 ஆண்டு ஆகியும் வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்காததால், கண்முன்னே இருக்கும் புதிய வீடுகளை பார்க்கும் போதெல்லாம் மன வேதனையாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக கனமழை பெய்யும் போது எல்லாம் குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. பல இரவுகள் தூங்காமல் இருந்தோம். இந்த நிலைமை மேலும் தொடராமல் இருக்க கட்டிய வீடுகளை உரியவர்களிடம் ஒப்படைத்தால் கவலையின்றி வாழ முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story