பழங்குடியினர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்
கரிக்கையூரில் பழங்குடியினர் மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புத்தகங்களை படித்து பழங்குடியினர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.
கோத்தகிரி,
கரிக்கையூரில் பழங்குடியினர் மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புத்தகங்களை படித்து பழங்குடியினர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.
மேம்பாட்டு மையம்
கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கரிக்கையூர் கிராமம் உள்ளது. இங்கு இருளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், பழங்குடியினர் மேம்பாட்டு மைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் நோட்டு புத்தகங்கள், ஒளிபடக்காட்டி (புராஜெக்டர்), ஜெராக்ஸ் எந்திரம் மற்றும் இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் வகையில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கு 3 அலுவலர்கள் பணி அமர்த்தபட்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பழங்குடியினர் மேம்பாட்டு மைய திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கினார். புதிய மையத்தை நீலகிரி மாவட்ட சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ராணா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
ஊக்க பரிசுகள்
தொடர்ந்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் தயாரிப்பு முறைகளை நேரில் காண தேர்வு செய்யப்பட்ட கரிக்கையூர் அரசு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் ராஜு, மாணவி ரேவதி ஆகியோருக்கு ஊக்க பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் வழங்கி பேசும்போது, பழங்குடியின மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அதிகாரிகளை தொடர்பு கொள்ள தயங்கக்கூடாது. இளைஞர்கள் உடற்பயிற்சி கூடத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மையத்தில் போட்டி தேர்விற்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றை படித்து அரசு துறைகளில் உயர் பதவிகளை அடைய வேண்டும். போட்டி தேர்வுகளுக்கு தயாராவது மட்டுமின்றி, நடனம், பாட்டு போன்ற தனி திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். காவல்துறை சார்பில், பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில் வனத்துறை அதிகாரி ராஜ்குமார், வெலிங்டன் கன்டோன்மென்ட் தலைமை அதிகாரி முகமது அலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.