புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
தர்மபுரி:
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். அந்த கொடூர தாக்குதலின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
தர்மபுரி 4 ரோட்டில் உள்ள அண்ணா சிலை முன்பு தர்மபுரி மாவட்ட முன்னாள் துணை ராணுவ படை வீரர்கள் நல சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் நாகன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் தர்மபுரி நகர காவல் துறை சார்பில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் முன்பு புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் டவுன் போலீசார், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.