திருச்சி விமான நிலையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு
திருச்சி விமான நிலையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பட்டு:
ஒப்பந்த ஊழியர்கள்
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. இதனை கையாளுவதற்காக ஏற்கனவே தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக விமானங்களின் இயக்கம் குறைந்த காரணத்தால் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.இதனால் விமான நிலையத்தில் பல்வேறு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு, தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
நேர்முகத்தேர்வு
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து தற்போது விமானங்களின் இயக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் விமானங்களில் வரும் சரக்குகளை கையாளுவதற்காக புதிய தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த பணிக்காக ஆட்களை தேர்வு செய்வதற்காக சுமார் 150 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த நேர்முகத் தேர்வானது நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏராளமானவர்கள் குவிந்தனர்
ஆனால் திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருவதால், தனியார் நிறுவனத்தின் சார்பில் அதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தவறான தகவல் முகநூல் மூலம் பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை சுமார் ஆயிரம் பேர் தங்களின் சான்றிதழுடன் பணிக்கான தேர்வு நடப்பதாக நினைத்து வந்தனர். ஆனால் கட்டுமான பணிக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரியவந்ததையடுத்து, அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். முன்னதாக தேர்வு நடப்பதாக விமான நிலைய பழைய முனைய பகுதியில் ஏராளமானவர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.