திருச்சி ஆயுதப்படை போலீஸ்காரர் விபத்தில் பலி
நச்சலூர் அருகே பரிதாபம் சாலை விபத்தில் திருச்சி ஆயுதப்படை போலீஸ்காரர் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆயுதப்படை போலீஸ்காரர்
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி தென்னைநகர் தெற்குப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வம். இவரது மகன் திருராகவன் (வயது 29). இவர் திருச்சி ஆயுதப்படையில் 2016-ம் ஆண்டு முதல் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகி வில்லை. இந்நிலையில் வழக்கம்போல பணிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு திருராகவன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
நெய்தலூர் காலனி-நங்கவரம் சாலையில் வாரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் பொய்யாமொழி ஊராட்சி நடைபாலம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்பிரமணி என்பவர் தான் ஓட்டி சென்ற 3 சக்கர மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் திருராகவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக 3 சக்கர மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருராகவன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
பலி
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த திருராகவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து திருராகவன் தந்தை செல்வம் கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்
இதையடுத்து திருராகவன் உடல் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அரசு வாகனத்தில் திருராகவனின் உடல் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான தெற்குப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க திருராகவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ஊர்வலமாக நங்கவரத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு திருராகவன் உடலுக்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் போலீசார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திருராகவன் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.