திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் 4 பேர் தற்கொலை முயற்சி
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் 26 பேர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதில் 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் 26 பேர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதில் 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உண்ணாவிரதம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வருதல், விசா காலம் முடிந்தும் இங்கேயே தங்கி இருத்தல், போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் வழக்கில் இருந்து விடுதலையானவர்கள் என 120 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, ருவாண்டா, தெற்கு சூடான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்தநிலையில் சிறப்பு முகாமில் உள்ள இலங்கையை சேர்ந்த அமல்ராஜ், மிதுலன் உள்பட 3 பேர் பல ஆண்டுகளாக சிறப்பு முகாமில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 7-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தற்கொலை முயற்சி
இதையடுத்து நேற்று முன்தினம் முதல் முகாமில் இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 23 பேர் தங்கள் மீதான வழக்கு கோர்ட்டில் முடிந்துவிட்ட நிலையில், உடனடியாக சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
நேற்று நடந்த உண்ணாவிரதத்தின் போது, 4 பேர் மரத்தில் ஏறி கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு மரத்தில் இருந்து கீழே இறங்க செய்தனர். இதையடுத்து உண்ணாவிரதம் இருந்து வருபவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.