பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உரிய நடவடிக்கை கோரி திருச்சி போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் முன் உறவினர்கள் திடீர் மறியல்


பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உரிய நடவடிக்கை கோரி  திருச்சி போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் முன் உறவினர்கள் திடீர் மறியல்
x

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உரிய நடவடிக்கை கோரி திருச்சி போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் முன் உறவினர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உரிய நடவடிக்கை கோரி திருச்சி போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் முன் உறவினர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் தற்கொலை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடியை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆனநிலையில் கடந்த ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், அவருடைய ஆடையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில், தனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில், தனக்கு 3 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது தற்கொலைக்கு அந்த 3 பேர் தான் காரணம் என்றும் எழுதி வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக ஆகாஷ், விக்னேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் அந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் நேற்று காலை திருச்சிக்கு வந்தனர். அவர்கள் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகம் முன் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தனது மகள் இறந்த வழக்கில் போலீசார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், அதனால் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வந்துவிட்டதாகவும், தற்போது அவர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்கள்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைப்பார்த்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்களை ஐ.ஜி. அலுவலகத்திற்கு மனு கொடுக்க அழைத்துச்சென்றனர். பின்னர், அந்த பெண்ணின் தந்தை, மத்திய மண்டல ஐ.ஜி.யிடம் புகார் மனு அளித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story