3 கார்கள் அடுத்தடுத்து மோதியதில் திருச்சி தனியார் கல்லூரி நிர்வாகி, மாணவிகள் உள்பட 4 பேர் பலி
துவரங்குறிச்சி அருகே நடந்த பயங்கர விபத்தில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதிகொண்டன. இதில் தனியார் கல்லூரி நிர்வாகி, 2 மாணவிகள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
துவரங்குறிச்சி அருகே நடந்த பயங்கர விபத்தில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதிகொண்டன. இதில் தனியார் கல்லூரி நிர்வாகி, 2 மாணவிகள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
கார்கள் மோதல்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 67). இவரது மனைவி மங்கையர்க்கரசி (64). இவர்களது உறவினர்களான ராஜபாளையம் கவிமணிதேசியவிநாயகம் பிள்ளை தெருவை சேர்ந்த ராஜா மகள் பூஜா (20), ராஜபாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் மகள் ரஞ்சனா (20), பேரன் பிரதுன் (7) ஆகியோரை அழைத்துக்கொண்டு ராஜபாளையத்தில் இருந்து நேற்று மதியம் ஒரு காரில் புறப்பட்டு திருச்சியை அடுத்த நவல்பட்டில் உள்ள மருமகன் லட்சுமணன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
காரை தங்கசாமி ஓட்டி வந்தார். மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த செவந்தம்பட்டி விலக்கு அருகே கார் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் திருச்சி சுந்தரம் பிள்ளை தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (65), அவரது மனைவி பத்மா (60) ஆகியோர் காரில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு கிராமத்தை சேர்ந்த டிரைவர் மோகன் (45) என்பவர் ஓட்டினார்.
4 பேர் பலி
இந்தநிலையில் தங்கசாமி ஓட்டி வந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலை மையதடுப்பைத் தாண்டி எதிரே உள்ள சாலைக்கு சென்று, மோகன் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதனையடுத்து பின்னால் வந்த மற்றொரு காரும் அந்த கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் கார்களின் இடிபாடுகளில் சிக்கி மங்கையர்க்கரசி, ரஞ்சனா, பூஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மோகன் ஓட்டிய காரில் வந்த பத்மா படுகாயத்துடன் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
4 பேர் படுகாயம்
மேலும் படுகாயம் அடைந்த தங்கசாமி, அவரது பேரன் பிரதுன், ராமகிருஷ்ணன், டிரைவர் மோகன் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் அப்பகுதியில் விபத்தில் சிக்கிய கார்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
கல்லூரி சேர்மன்
விபத்தில் இறந்த பூஜா, ரஞ்சனா ஆகியோர் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தனர். மேலும் விபத்தில் இறந்த பத்மா திருச்சி காட்டூரில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் சேர்மனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.