திருச்சியில் அதிகபட்சமாக 73 மில்லி மீட்டர் மழை பெய்தது
திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 73 மில்லி மீட்டர் மழை பெய்தது. இந்த மழையால் மாநகரில் அரசு அலுவலகங்களில் மழைவெள்ளம் சூழ்ந்தது.
திருச்சி, ஜூன்.8-
மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 73 மில்லி மீட்டர் மழை பெய்தது. இந்த மழையால் மாநகரில் அரசு அலுவலகங்களில் மழைவெள்ளம் சூழ்ந்தது.
இடி-மின்னலுடன் பலத்த மழை
வானில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெற்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இரவில் மழை பெய்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் திருச்சி கிழக்கு, மேற்கு, லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் தாலுகாக்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலையில் மழை சற்று ஓய்தாலும், காலை 9 மணி வரை சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது.
வெள்ளம் சூழ்ந்தது
இந்த மழை காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. திருச்சியில் திருச்சி கோர்ட்டு வளாகம், சார்நிலை கருவூலம், மாவட்ட வனத்துறை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதனால் அங்கு வந்த பொதுமக்கள், வக்கீல்கள், அரசு ஊழியர்கள் அவதி அடைந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
48.23 செ.மீ. மழை பதிவு
திருச்சி நகரம்-73, பொன்மலை-67.80, திருச்சி ஜங்ஷன்-67, லால்குடி-52.40, திருச்சி விமான நிலையம்-45, துவாக்குடி ஐ.எம்.டி.ஐ.-31.30, கல்லக்குடி-23.40, புள்ளம்பாடி-21.40, தென்புறநாடு-20, பொன்னியாறு அணை-19, நந்தியாறு-18.60, நவலூர் குட்டப்பட்டு-15, தேவிமங்கலம்-9.60, வாத்தலை அணைக்கட்டு-5.40, சமயபுரம்-5.20, மணப்பாறை-4.20, சிறுகுடி-3, துறையூர்-1. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 48.23 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.