காளை முட்டியதில் திருச்சி வாலிபர் பலி


காளை முட்டியதில் திருச்சி வாலிபர் பலி
x

கீரனூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் திருச்சி வாலிபர் பலியானார். 22 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே சீமானூர் கிராமத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை குளத்தூர் தாசில்தார் சக்திவேல், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

இதில் 160 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 682 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வாலிபர் பலி

காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த திருச்சி கே.சாத்தனூர் இச்சிக்காமலைப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜெயந்த் (வயது 21) உள்பட 4 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்த் பரிதாபமாக இறந்தார்.

பரிசு

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மிக்சி, மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் சீமானூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.


Next Story