டெம்போக்களில் கடத்த முயன்ற 1400 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
டெம்போக்களில் கடத்த முயன்ற 1400 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே நீரோடி காலனி பகுதியில் கிள்ளியூர் வட்ட வழங்கல் தாசில்தார் வேணுகோபால் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட 2 டெம்போக்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. இதைக்கண்ட அதிகாரிகள் சந்தேகமடைந்து வாகனங்களை நிறுத்தும்படி சைகை காட்டினர். அதிகாரிகளை கண்ட டிரைவர்கள், டெம்போக்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த 2 டெம்போக்களையும் சோதனை செய்தனர். அப்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெய் மற்றும் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய்கள் பிளாஸ்டிக் கேன்களில் 1400 லிட்டர் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாகனங்களுடன் மண்எண்ணெய்களை பறிமுதல் செய்தனர். பின்னர், மண்எண்ணெய்யை வள்ளவிளை கிட்டங்கியில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.