கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தள்ளுவண்டி வியாபாரிகள்
கன்னியாகுமரியில் தள்ளுவண்டி வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தென்தாமரைகுளம்:
கன்னியாகுமரியில் தள்ளுவண்டி வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தள்ளுவண்டி வியாபாரிகள்
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் தள்ளுவண்டி (உருட்டு) வியாபாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் 168 நிரந்தர கடைகள் வழங்கப்பட்டன.
இதில் ஒரு சில கடைகளை தவிர இதர கடைகளில் வியாபாரம் இல்லாததால் கடைகள் அனைத்தும் முடங்கின. இதனையடுத்து இந்த கடைகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் பகுதியில் மறு சீரமைப்பு செய்து தர வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
முற்றுகை
இந்தநிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் இந்த கடைகளை மறுசீரமைப்பு செய்து பொது ஏலத்திற்கு கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றியது.
இதனை கண்டித்து நேற்று கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை கவுன்சிலர்கள் சி.எஸ்.சுபாஷ், நித்தியா ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் திரண்டு முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் மண்எண்ணெய் கேனுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
பேச்சுவார்த்தை
பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோரிடம் கவுன்சிலர் சுபாஷ், நித்யா மற்றும் வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு பேரூராட்சி நிர்வாகத்தினர், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி ஒரு வார காலத்திற்குள் சுமூக முடிவு எடுக்கப்படும் என கூறினர்.
இதனை தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.