தர்மபுரியில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடங்கியது-17,012 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு


தர்மபுரியில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடங்கியது-17,012 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகளை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 17,012 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

முதல்-அமைச்சர் கோப்பை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் 2022-2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் பள்ளி பிரிவு, கல்லூரி பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, அரசு ஊழியர்கள் பிரிவு, பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் தனித்தனியாக 51 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளன. பளு தூக்குதல், டென்னிஸ், கடற்கரை கைப்பந்து ஆகிய மண்டல அளவிலான போட்டிகள் தர்மபுரியில் நடத்தப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 17 ஆயிரத்து 12 வீரர்-வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள் 4 ஆயிரத்து 505 பேரும், மாணவிகள் 1,359 பேரும் என மொத்தம் 5 ஆயிரத்து 864 பேர் பதிவு செய்துள்ளனர்.

தொடக்க விழா

போட்டிக்கான தொடக்க விழா தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து, போட்டிகளை தொடங்கி வைத்தார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

முதல் கட்டமாக கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, மேசைப்பந்து, கபடி, சிலம்பம் ஆகிய போட்டிகளை கலெக்டர் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தர்மபுரி மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, வருகிற மே மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

வாழ்த்து

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், வீரர்-வீராங்கனைகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, நகராட்சி தலைவர் லட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், தர்மபுரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் பாஸ்கர், தாசில்தார் ராஜராஜன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story