கண்காணிப்பு கேமராக்கள் இயங்காததால் திருடர்களை பிடிப்பதில் சிக்கல்
அறந்தாங்கி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இயங்காததால் திருடர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க ெபாதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தொடர் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகர் பகுதியில் 50 ஆயிரத்துக்கு மேல் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகர பகுதியில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அறந்தாங்கி போலீஸ் நிலையம் பகுதியில் உள்ள இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இவ்வாறு கடந்த சில மாதங்களாக அறந்தாங்கி நகர பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றது.
போலீசார் விசாரித்து வந்தாலும் திருடர்கள் யாரையும் கைது செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். திருடர்கள் பயத்தால் பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு செல்ல அச்சப்பட்டு கொண்டும் குடும்பத்துடன் செல்வதை தவிர்த்து வருகின்றனர். ஒரு சிலர் சென்றாலும் அச்சத்துடன் சென்று விட்டு அச்சத்துடன் வீடு வந்து சேரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தெருக்களில் நுழைவு வாயிலில் அமைக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
அறந்தாங்கி நகர் பகுதிகளில் நடைபெறும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. தற்போது திருடர்கள் புதிய தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்கின்றனர். திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் எந்தவிதமான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரியவில்லை. இனியாவது திருட்டு சம்பவங்களை தடுக்க நகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் ஏற்கனவே பொருத்திய கண்காணிப்பு கேமராக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருக்களில் நுழைவு வாயில் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அப்போதுதான் தெருக்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் குறித்து அறிந்து கொள்ள முடியும். திருட்டு நடந்தாலும் இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் விரைந்து கைது செய்யலாம்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
தற்போது நடைபெற்றுள்ள திருட்டு சம்பவங்களில் திருடர்கள் சிக்காமல் இருப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் போன்ற ஆதாரங்கள் இல்லாமல் உள்ளது. இதனால் போலீசார் திருடர்களை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுத்தி இருக்கிறது. இதே நிலை நீடித்தால் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
திருடர்களை கண்டுபிடிக்கும் வகையில், இனிமேல் திருட்டு நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் நகர் பகுதியில் தெருக்களில் முக்கிய நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
கோரிக்கை
மேலும் அறந்தாங்கி பஸ் நிலையம், காமராஜர் சிலை ஆகிய 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் தான் இயங்குகிறது. பின்னர் அண்ணா சிலை, கட்டுமாவடி முக்கம், எம்.ஜி.ஆர். சிலை, வ.உ.சி. திடல், செக்போஸ்ட் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் அது இயங்காமல் உள்ளது.
இன்னும் நகர பகுதியில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அறந்தாங்கி நகர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.