தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து டிரைவர் உள்பட 5 பேர் உயிர் தப்பினர்


தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து  டிரைவர் உள்பட 5 பேர் உயிர் தப்பினர்
x

லாரி மோதி விபத்து

ஈரோடு

கோபி அருகே தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் உயிர் தப்பினார்கள்.

தடுப்புச்சுவரில் மோதியது

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஆலையில் இருந்து 8 ஆயிரம் ஆஸ் பிரிக்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை ஓமலூர் அருகே உள்ள துளசம்பட்டியை சேர்ந்த நடராஜ் (வயது 35) என்பவர் ஓட்டிச்சென்றார்.

அவருடன் அதே பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் ராஜேந்திரன், ராஜமாணிக்கம், மணிகண்டன், மாரியப்பன் ஆகியோரும் சென்று கொண்டிருந்தனர். ஈரோடு மாவட்டம் கோபி ல.கள்ளிப்பட்டி பிரிவை அடுத்த பெட்ரோல் பங்க் அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியது.

உயிர் தப்பினர்

இதில் தடுப்புச்சுவர் உடைந்து நொறுங்கியது. மேலும் மோதிய வேகத்தில் லாரியின் முன்பகுதியும் நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அதைத்தொடர்ந்து நேற்று காலை மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு அதில் ஆஸ் பிரிக்ஸ் கற்கள் ஏற்றப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான லாரி கிரேன் மூலமாக மீட்கப்பட்டு ரோட்டோரமாக தள்ளி நிறுத்தப்பட்டது.

லாரி விபத்துக்குள்ளான இடத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. அதே இடத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது. லாரி தடுப்புச்சுவர் மீது மோதிய போது எதிரே வாகனங்கள் வந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எச்சரிக்கை வழிகாட்டி பலகை

கரட்டடிபாளையத்தில் இருந்து குள்ளம்பாளையம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தடுப்புச்சுவரில் 25-க்கும் மேற்பட்ட லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் விபத்துகளை தடுக்க தடுப்புச்சுவர் குறித்து பெரும்பாலான இடங்களில் எச்சரிக்கை வழிகாட்டி பலகை வைத்து, பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story