என்ஜினீயரிங் கல்லூரி பஸ் மீது லாரி மோதல்; 41 மாணவர்கள் காயம்
விருத்தாசலம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 41 மாணவர்கள் காயமடைந்தனர். இவர்களை அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விருத்தாசலம்:
திட்டக்குடி பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளை ஏற்றுவதற்காக கல்லூரி பஸ் இன்று காலை விருத்தாசலத்துக்கு வந்தது. அங்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம்-வேப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாத்தியம் கிராமத்தில் மாணவர்களை ஏற்றுவதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. அதில் மாணவர்கள் ஏறிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் நெய்வேலியில் இருந்து வேப்பூர் நோக்கி வந்த லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக கல்லூரி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 41 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து, காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து கல்லூரி பஸ் மற்றும் லாரியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து பற்றி அறிந்ததும் அமைச்சர் சி.வெ.கணேசன் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர், உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அப்போது தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி, நகரமன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சுரேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், மெக்கானிக் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், பழனிசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வசந்தகுமார், கார்த்திக், முத்துராமன், லோகு, பிரபு, நாராயணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.