லாரிகள் மோதல்; 2 டிரைவர்கள் படுகாயம்


லாரிகள் மோதல்; 2 டிரைவர்கள் படுகாயம்
x

வேடசந்தூர் அருகே லாரிகள் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

சேலத்தில் இருந்து மதுரைக்கு பல்லாரி வெங்காயம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. அந்த லாரியை, சேலம் மாவட்டம் பெரியகாளம்பட்டியை சேர்ந்த செல்வம் (வயது 55) ஓட்டி வந்தார். கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பிரிவில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் லாரியை செல்வம் நிறுத்தினார்.

அப்போது மும்பையில் இருந்து மதுரை நோக்கி பஞ்சுபேரல்களை ஏற்றிக்கொண்டு, நாமக்கல் மாவட்டம் வென்னந்தூரை சேர்ந்த மாணிக்கம் (45) ஓட்டி வந்த லாரி, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் 2 லாரிகளும் சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் சிக்கிய டிரைவர் செல்வம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல் படுகாயம் அடைந்த மாணிக்கத்துக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story