மொபட் மீது லாரி மோதல்; விவசாயி பலி
வி.கைகாட்டியில் மொபட் மீது லாரி மோதியதில் விவசாயி பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் லாரிக்கு தீவைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
விவசாயி
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள காட்டுப்பிரிங்கியம், அய்யா நகரை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 65), விவசாயி. இவரது 2-வது மனைவி பச்சையம்மாள். இவர் பெரியநாகலூர் பாலக்கரையில் உள்ள ஒரு விவசாயி நிலத்திற்கு கடலை பிரித்தெடுக்கும் பணிக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் ராஜாங்கம், நேற்று இரவு தனது மனைவி பச்சையம்மாளை மொபட்டில் வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியநாகலூர்-பாலக்கரை பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சென்றபோது, பின்னால் சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதியது.
லாரிக்கு தீவைப்பு
இதில் பலத்த காயமடைந்த ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பச்சையம்மாள் படுகாயம் அடைந்து வலியால் துடிதுடித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், லாரி கண்ணாடிகளை உடைத்து தீவைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த பச்சையம்மாளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கயர்லாபாத், அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள் லாரிகளை இவ்வழியே இயக்கக்கூடாது என வலியுறுத்தி அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலையில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அரியலூர் ஆர்.டி.ஓ., தாசில்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.