களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 வயது குழந்தை பலி;தம்பதிக்கு தீவிர சிகிச்சை


களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 வயது குழந்தை பலி;தம்பதிக்கு தீவிர சிகிச்சை
x

களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. தம்பதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி

களியக்காவிளை,

பாறசாலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. தம்பதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குமரி தம்பதி

குமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்தவர் யகோவா (வயது 30), மீன் வியாபாரி. இவருடைய மனைவி அஸ்வினி (26). இவர்களுடைய மகள் ரித்திகா (2).

நேற்று யகோவா தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் கேரள மாநிலம் பாறசாலை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

லாரி மோதியது

பாறசாலையை அடுத்த காராளி பகுதியில் சென்ற போது, எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் குழந்தை ரித்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். யகோவா, அஸ்வினி மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோகம்

மேலும் இதுபற்றி பாறசாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த குழந்தை ரித்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story