லாரி டிரைவர் அரிவாளால் வெட்டிக்கொலை
பொங்கல் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவர்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை ஆண்டியப்ப நகரை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 29), லாரி டிரைவர். லாலாபேட்டை மாம்பழக்கார தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் பிரவீன்குமார் (27), கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர்.
கடந்த 17-ந் தேதி ஆண்டியப்ப நகர் விளையாட்டு மைதானம் அருகே பொங்கல் விளையாட்டு விழா நடத்துவது தொடர்பாக விக்னேசும், பிரவீன்குமாரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரவீன்குமார் பொங்கல் விளையாட்டு விழாவில் கபடி போட்டி நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு விக்னேஷ் கபடி போட்டி நடத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
அரிவாள் வெட்டு
இதனைதொடர்ந்து பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் தனது நண்பர்களுடன் விளையாட்டு மைதானத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரவீன்குமார் கபடி போட்டி நடத்தாதது குறித்து கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விக்னேஷ் தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த விக்னேசை சக நண்பர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறையில் அடைப்பு
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விக்னேசின் தம்பி நவீன் கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரவீன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.